28.8.11

பிரிகிறேன் இப்போது..







உயரம் ஏற்ற
ஊக்கம் தந்து
தோள் தட்டிய
தோழமைகளே..-எனது
பதிவுலக உறவுகளே!!!

பிரிகிறேன் பிரிகிறேன்
பதிவுலகை விட்டு
பிரிகிறேன்...
நிரந்தரமற்ற எனது
பதிவுலக வாழ்வில்
வருவதும் போவதுமே-எனது
வாழ்வாச்சு..

சில நாட்களில் வரலாம்....
சிலவேளை..
சில மாதங்களின் பின்னே
சந்திக்கலாம்...
மறந்திடேன் உங்களை..
மறுபடியும் வரும் வரை
மறந்திடாதீர் என்னையும்.!!!!.

காலத்தின் மாற்றங்கள்
சாதகமாயும் ,,,,,சாதகமற்றும்
நிலவுகையில்
உதிப்பதும்.....
சட்டென மறைவதும்
எனது கதையானது...

இன்ரனெற் வசதி
இல்லாதபோதும்..
கணனிக்கு ஓய்வு
கிடைக்காத போதும்
உங்கள் பக்கம் எனது
வருகையும் பின்னூட்டமும்
இல்லாமலே போனது...
காரணம் இதுவே!!!

ஈழத்தில் கண்ட
அவலத்தின் காட்சிகளை
வெளிச்சொல்ல முடியாது போகையில்
எழுத்துக்களில் ஆற்ற நினைத்தேன்..
தனிமை வாட்டியபோது...
மனம் வலிக்கும்போது...
பொழுது போக்காக
ஒரு புறம் இருந்தது
இந்த வலைப்பூ..
வேறு எந்தவித
குறிக்கோளும் எனக்கில்லை..

அண்ணனின் நண்பனால்
கிடைத்தது இந்த
வலைத்தள அறிமுகம்..
அவருக்கு எனது
முதல் நன்றி..

கட்டம் கட்டமாய்
சின்னச் சின்னதாய்
நண்பர்களே ..
உங்களின் வருகையால்-நீவீர்
சொல்லும் கருத்துரையால்
மெல்லென
வளர்கிறேன் பதிவுலகில்..
உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்...

உறவுகளே!!!!
மீண்டும் என்
கால் பதிக்கும் வரை
மறந்திடாதீர் என்னை..
பிரிகிறேன் இப்போது..

செம்பகம்..



27.8.11

வாழ்க நீ பல்லாண்டு..


உடன் பிறவா சகோதரியே
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!!!!


27.08.2011








இனிய !!!
காலம் உன் 
கரம் பற்றி
அதிஸ்டங்களை உன்மீது
அள்ளிச் சொரிந்து
வாழ்க்கை முழுதும் 
வனப்பு வீசிட................

சோகங்கள் ஒளிந்து
சோலை வனமாக-உன் 
மனமெல்லாம் சந்தோசிக்க............

ஏற்றங்களில் அடிவைத்து -நல்
மாற்றங்கள் நீ காண.....

ஏக்கங்கள் எல்லாமே
எளிதாய் கைசேர..........

தாக்கங்கள் முழுதாய்
தகர்த்தே நீ ஒதுக்கிட.........


நாளும் நலமுடன்
நீடூழி நீ வாழ்ந்திட
மலர்கின்றபொழுதெல்லாம்
மகிழ்வோடு நீயிருக்க............

புலர்கின்ற புதிய அகவையில்
வாழ்க வாழ்கவென!!!!
ஒருகொடியில் பூத்த
இருமலரான உன் சோதரியையும்
வாழ்த்துகின்றேன் இந் நாளிலே...





அன்புடன் ..
செம்பகம்

24.8.11

இலக்கின் வழியே நானுமாய்.....





புதியதோர் வாழ்க்கையில்
புகுந்து சுழல
காலச் சக்கரம்
கை நீட்டி அழைக்கிறது..

நீண்ட நாட்களின் 
நிலையான காத்தல்
நிஜமானதாய் இப்போது...

கட்டுக் கட்டாய் 
கட்டி வைத்த
கற்பனைக் கட்டுக்களை
கட்டவிழ்க்கும் வாய்ப்பு
மிக அருகிலே.....

கால் தடக்கி வீழ்ந்தாலும்
கடந்து விடுவேன் -என்ற
திண்ணம் இப்போ
ஆழமாய் மனதில்..

விடிகின்ற பொழுதுகளை
வல்லமையோடு வரவேற்று
கழிகின்ற இரவுகளை
கைகொடுத்து அனுப்பி
காத்திருக்கிறேன் அந்த நொடிக்காய்..

நிமிடங்கள் வருடமாகிய
பொழுதுகள் மாறி
வருடங்களும் நிமிடமாக
பயணிக்கும் ஓர் நினைவு..

விலகாத தனிமையை மட்டும்
விரல் நுனியில் பற்றியவாறு
வாழ்க்கையின் படகு சற்று

நகர தொடங்குகிறது..

கைகோர்த்து விட்ட
அந்த சக்திக்கு
நன்றி சொல்லி -என்
இலக்கின் வழியே நானுமாய்.....

செம்பகம்

22.8.11

ஆதிக்க அறிமுகங்கள்..








நிரந்தரமாய் தொலைத்தோம் -எங்கள்
நிம்மதியான வாழ்வை..
நீதி தேடி அலைகிறோம்
நேர்மையோடு எவருமில்லை..

அன்று தொட்டு
இன்று வரை
காண்பதெல்லாம் ...
கேட்பதெல்லாம்..
நிகழ்வதெல்லாம்..
உயிர் பறிப்புக்களும் ..
குருதி பாய்ச்சலுமே...

சபிக்கப்பட்டு படைக்கப்பட்டதா??-அல்ல
சாக்கடை நாட்டில் வாழ்வதாலோ??
இலங்கை ஜனநாயகத்தை
புகழ்ந்து உரைக்க
வரி ஒன்றேனும்
இல்லை தமிழில்..
தூக்கி கொடுத்து விட்டு
தூரத்தில் நின்று
வேடிக்கை பார்க்கிறது
பிரித்தானியா????

மரண வாழ்வை
முழுதாய் பரிசளித்து
மார்தட்டி சிரிக்கிறது!!!!


புதிய புதிய அறிமுகங்களாய்
இன அழிப்பிற்கும்...
உயிர் உறிஞ்சலுக்கும்....
கட்டவிழ்த்தி விடுவது
ஆதிக்க வரலாறு..-இப்போ
கிறீஸ் மனிதனாய்
உருவெடுத்திருக்கிறது..
ஆயிரம் கேள்விகளோடு
விடை தெரியாத
மர்மங்களாக இன்றுவரைக்கும்..

குண்டுமழைக்குள்ளும்..
இரத்த ஆற்றிலும்
மூழ்கி குளித்த
தமிழ் நங்கையர்
அச்ச உணர்வோடு
அல்லல் படுவதை எண்ண
மனம் வலிக்கிறது..

எங்கள் ஏக்கமும்..
எங்கள் கண்ணீரும்..
எங்கள் அச்சங்களும்..
எங்கள் பெயர்வுகளும்..
எங்கள் உயிர் பறிப்புக்களும்..
சுதந்திரமற்ற வாழ்க்கையும்..
முடிவு பெறாத
முடிவிலியாகி
சிங்களத்து பிடியில்
தமிழர் நாடித்துடிப்புகள்
தொக்கி நிற்கிறது..

இருந்தும்!!!
எஞ்சியிருக்கும் உயிரோடு
உரிமைகள் கிடைக்கும்-என்ற
நம்பிக்கை கொண்டு
தமிழர் சுவாசங்கள்
இன்றும் சுவாசித்துக்கொள்கிறது..
நம்பிக்கையே வாழ்க்கை ஆனதால்!!!!

செம்பகம்










9.8.11

எதற்கோ தெரியவில்லை..?























அபிவிருத்திகளோ உச்ச வேகத்தில்
நடந்தேறிய வண்ணம் .-ஆனால்
அடிவைக்கும் இடமெல்லாம்
கையில் பேணியுடன்
அங்குமிங்குமாய்..

இருக்கும் அறையைவிட்டு
வெளிப்புறமாய் கால் வைத்தால்- மனம்
வலிக்காமல் திரும்பியதில்லை
ஒரு நாளும்...

ஏராளம் கேள்விகளோடு
அந்தரிக்கும் மனதை
அடக்க முடியாமல்
சிந்தித்துக்கொண்டே
பஸ் தரிப்பிடத்தை
தவற விட்டதுமுண்டு..

தோல் சுருங்கி
தொண்டைக்குழி உள்விழுந்து
சுவாசிக்கக் கூட
சக்தியற்ற நிலையில்
முதியவர்கள்...

பச்சிளம் குழந்தையை
பக்கத்தில் சரித்துவிட்டு
கிழிசல் உடைகளோடு
பெண் ஜீவன்கள்...

அங்கங்களை இழந்து
இயங்காத குறையோடு
பார்க்கவே முடியாத
பரிதாப நிலையோடு
பலர்..

கண்ணில்லை..
காலில்லை..
கையில்லை...
ஆனால் பாடுவதற்கு
குரல் இனிமை..
கௌரவக் கையேந்தல்கள்
ஒரு பக்கமாய்..

மன நோயால் பாதிப்படைந்து
மனம் போன போக்கோடு
பல மனித உலாவல்கள்..

இப்படி இப்படியாய்
அங்கும் இங்குமாய்
விதைக்கப்பட்டு கிடக்கிறது
மனிதப்பிறப்புக்கள்..

ஓயாத போர் நடந்த
நம் நாட்டில்
இதே நிலையில்-எம்
மக்கள் எவரையும் கண்டதில்லை
எம் கண்கள்...
எல்லாமே!!
எங்கள் சூரியதேவனால்
கட்டி அமைக்கப்பட்ட
அதிசய வழிப்படுத்தல்...
திட்டமிடல்கள்...
உடலை சிலிர்க்கத்தான் செய்கிறது..
நிரந்தர நாடொன்றாய்
தமிழீழம் கிடைத்திருந்தால்
வியக்கும் வழியில்
நாடு மிளிர்ந்திருக்கும்...-அதற்கு
சந்தேகம் ஏதுமில்லை...


மனம் வலித்தாலும் -அதில்
ஓர் பெருமை எனக்குள்ளே-பின்னர்
அடுக்கடுக்கான பெருமூச்சுடன்
எங்கெல்லாம் போகும் நினைவுகள்...
கட்டிவைத்துக் கொள்கிறேன்
பத்திரமாய் இதயத்துள்....


பாதைகளை நோக்கியபடி!!!!



செம்பகம்