12.8.10

எதுவரைக்கும்.....................




விறைத்த மனசு
வரண்ட பாதங்கள்
கரடுமுரடான கரங்கள்
கலங்கிய விழிகள்
இடிந்து போன கன்னங்கள்
புன்னகை இழந்த உதடுகள்
எதுவரைக்கும்........


உதிர்ந்து போன கனவுகள்
இடிந்து போன பிரமிட்டுக்களாய்
நித்தம் நித்தம்
நெஞ்சைப் பிளக்க
விரக்தியின் வாசலில்
விம்முகின்ற மனங்கள்
எதுவரைக்கும்................


புத்தம் புதிய மனிதராய்
பூமியில் பிரசவிக்கையில்
அழுகைக் குரலோடு
வெளிவந்த போது
அப்போது அறியவில்லை
ஏனென்ற கேள்விக்கு
இப்போது மட்டும்
விடை புரிகிறது


வலிகளையே நிரந்தரமாக்கி
வாழ்க்கையின் விழிம்பைத்தொட
முயல்கின்ற மனிதர்களின்
ஏக்கங்களாய் .............
செம்பகம்.











11.8.10

மௌன வலி

ஊரை எழுப்பும்
சேவல் கோழிகளின்
எச்சரிக்கை ஒலி
ஊர் முழுதும் ஓயவில்லை.......


புகையும் அடுப்போடு
அம்மாவின் புறுபுறுப்பு
தடல் புரலாய் கேட்கும்
சமையல் அடுக்குகளின் சத்தம்......
இண்டைக்கு லீவோ பிள்ளைக்கு!
அப்பாவிடம் அம்மாவின் கேள்விகள்...???

அம்மாவிடம் எப்படிச்சொல்ல
சங்கடப்பட்டபடி மனசு...
தலையணை முழுதும்
உறிஞ்சப்பட்டு
படுக்கை மெத்தையை
நனைத்துக் கொண்டிருக்கிறது
ஈரம்....


மெது மெதுவான அனுகல்
வெளித்தெரியாத முனகல்
தலையணைக்கும் .......
படுக்கைக்கும் மட்டுமே -அதன்
பாசைகள் புரிந்துகொள்ளமுடிகிறது...


நீண்ட காலங்களாய்
காத்திருப்பின் ஏக்கம்...
மனசுக்குள் கட்டப்பட்ட
அழகிய தாஜ்மகால்
ஏழாண்டு காலமாய்
எவர்க்கும் தெரியாமல்
பூட்டி வைத்த
பதிரான காதல்........
எரிந்து சாம்பலாகுமென
எப்போதும் நினைத்ததில்லை


சந்திப்பின் இடைவெளிகள்
வருடக் கணக்குகளாய்...
தொடர்பு மட்டும்
தொலை பேசியில்...
உரையாடுகையில் உதிர்க்கும்
நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள்-அதனால்
புடம் போடப்பட்ட இதயம் -அத்தனையும்
போலி வார்த்தைகளென -அப்போது
அறிந்திருக்கவில்லை........


நிரந்தரமற்ற வாழ்க்கையில்
நிஜமாய் கிடைத்தவை
ஏமாற்றம் மட்டுந்தானா???
விழிகளில் பிரவகித்த
கண்ணீர் மழையை
எவர்க்கும் தெரியாமல்
துடைத்துக் கொள்கிறது
கரங்கள்........


SEMPAKAM

4.4.10

நிரந்தர ஏக்கம்














படைத்தாய் பூமியில்
கொடுத்தாய் அழகிய வாழ்வை
பறித்தாய் அத்தனையும்.....
பதினாறு வயதில்
கதிகெட்டு வாழ்கிறேன்
பதிந்து கிடக்கும்
மனசின் காயங்களை
வரிகளாக்க முயல்கிறேன்
வலிகள் அதிகமாய் இருக்கிறது
விடிந்தது காலை
தொடங்கியது எறிகணை மழை
பசியால் தங்கை சுருண்டு கிடந்தாள்
பார்த்த எனக்கு பொறுமையிழந்து
பக்கத்து வீட்டில்
கஞ்சி வாங்கி வந்தேன்

எங்குமே புகை மண்டலம்
அயல் எங்கும
அவலத்தின் ஓசை
கால் போன திசை நோக்கி
ஓடோடிச்சென்றேன்

ஆறு வயது
ஆசைத்தங்கை
அரை உயிரில் துடித்து - என்
மடிமீதே மூச்சிழந்து போனாள்
அன்புத்தம்பி தலையின்றி கிடந்தான்
அப்பாவோ உடல் சிதைந்து கிடந்தார்

அம்மாவை மட்டும் - என்
கண்ணுக்கு எட்டவில்லை
எஞ்சியது இருவருமென்று
உரத்து அழைத்து ஓடினேன்
தென்னை அடியில்
அன்னையின் தலை......

செய்வதறியாது தவித்தேன்
ஆற்றிட யாருமில்லை.......
என் தலை மீது
எறிகணை வீழாதோ - என்று
தேம்பி அழுதேன்-அதில்
தோற்றுத்தான் போனேன்

அலையின் மீது
துடுப்பிழந்த படகாய்
அரவணைக்க யாருமின்றி
அனாதையாய் அலைகிறேன்

இறைவா!
ஒருவரைக்கூட விட்டு வைக்க
சொட்டு மனமும் இரங்கலையா...?
வரம் ஒன்று கேட்கிறேன்
மறுத்திடாமல் தந்திடுவாயோ

பெற்றவரோடு சேர்ந்திட
சாகும்வரம் தருவாயா.?
சந்தோசமாய்ச் சேர்ந்திடுவேன்.

செம்பகம்


அத்தனையும் கற்பனை அல்ல......

போர் தந்த வலிகள்



நண்பர்களே தற்போது இன்ரநெற் வசதியற்ற இடத்தில் இருப்பதால் எனது ஆக்கம் தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியிருக்கிறது.
வசதி கிடைக்கும் போது வருவேன்....

23.3.10

புரிதல்களின் தவறு வலியானதே .........



















உனக்கும் எனக்குமான
உறவின் புரிதல்கள்.....
நீண்ட காலங்களென -நீ
நிச்சயமாய் மறுக்க முடியாதவை

எத்தனையோ மனிதர்களை
எதிர்கொண்ட என் வாழ்வில்
உனை மட்டும்
கணக்கிடத் தவறியதன்
காரணம் தேடுகின்றேன்....

உலகம் என் முதுகை
வியப்போடு தட்டுகிறது...
உனக்கும் இந் நிலையா??????
வார்த்தைகள் வரமறுக்க
தலையை மட்டும்
மௌனமாய் அசைக்க
தள்ளிவிட்டாய் என்னை !!!!!

மறந்திடு என்று
சுகமாய் விலகினாய்
நீ பகிர்ந்த காதல்,.........
நீ தந்த முத்தம்..........
அத்தனையும் என்ன செய்ய????
பத்திரமாய் உடலோடு காவுகின்றேன்...
ஏனெனில்.................
உனக்கு திருப்பி அளித்திட...!!!!!

என் நெஞ்சத்துள்
நிறைத்து வைத்து
யாசித்த காலங்கள்.......

இதய இடுக்கைக்குள்
அடுக்கி வைத்த ஆசைகள்......

தூங்கும் இரவுகள் முழுதும்
தின்றுவாழும் உன் நினைவுகள்......

தூக்கத்தையே தொலைத்து
புரண்டு புரண்டு
படுத்த சாமங்கள்.....

காற்சட்டைக்குள் பத்திரப் படுத்திய -உன்
காகித கிறுக்கள்கள்....-அதை
அடிக்கடி புரட்டிப் பார்த்த
நிமிடங்கள்............

சாவின் விளிம்பைத் தொடுகையில்
உன்னை நினைத்தே
தப்பித்த பொழுதுகள்.....

தொலை பேசியே பேசமுடியாத
தொலைவில் வாழ்ந்த போதும்
கிடைக்கும் அரிய வாய்ப்புகளில்
பத்துமாதம் சுமந்தவளை தவிர்த்து
உன்னோடு மட்டும் உரையாடிய நேரங்கள்....

இப்படி இப்படி எத்தனையோ...
அத்தனையும் புரட்டுகையில்
இழந்து போன காலத்தை
எண்ணி எண்ணி வெம்புகின்றேன்...
















நீ அனுப்பிய

நினைவுப் பரிசுகள்....

பிரியங்கள் பகிர்ந்த
காகித மடல்கள்...-உன்

நிழற்படங்களைத் தாங்கிய
சேகர ஏடுகள்.........

சேகரித்து வைத்த
என் கரங்கள்....

எனை அறியாமலே
விறு விறுக்கின்றன !!!!!

எரிக்க எடுத்த
தீக்குச்சியின் பெருஞ்சீற்றம்
வழமைக்கு மாறாய்......
எரிவின் வெட்பத்தால்
பிரபஞ்சமே பொசுங்கி விடுவதாய்
வெஞ்சினத்தோடு எரிந்தன....

உன் நிராகரிப்பிற்கான
காரணம் மட்டும்
இன்று வரை புரியவில்லை
இதற்கான மறுதாக்கம்
ஓர் நாள்.......
வாழ்க்கை வலிக்கையில்
நீயாகவே புரிந்து கொள்வாய் ...!!!!!!!!!

செம்பகம்


நண்பனின் உண்மைச்சம்பவத்தை வரிகளாக்கினேன்.


























9.3.10

புதிய கிளிநொச்சி


















அழகு தேசமே
எழில் கொஞ்சும் பேரழகே-உன்
இறக்கை ஒடிந்து
இயற்கை வற்றி
இடிந்து போனதேனோ

உறக்கம் அறியா-எங்கள்
ஊர்களின் மெளனம் தான் என்ன..?
பட்டுப் போய் கிடக்கும்-என்
பழைய ஊரே
கிளிநொச்சி மண்ணே-நீ
கிலி கொண்டு இருப்பதேனோ...?
உன்னில் கொட்டுண்டு கிடக்கும்
அத்தனை அழகும் எங்கே...?

சாலையோரம் உயர்ந்து நின்ற
கட்டடங்களே...........
டிப்போ பேருந்து தரிப்பிடமே...
யாருக்கு ஏது செய்தீர்
தெருவின் ஓரம்
சிரித்து நின்ற
சந்திரன் பூங்காவே
உன்மீதும் புதியதோர் சிலையா..?
சிங்கள வெறியன்
நினைவுத் தூபியாம்
நீ அதிர்ந்தாவது
வீழ்த்திடமாட்டாயா..?

இதமிதமாய் குளிரவைத்த
சேரன் பாண்டியன்
சுவையூற்றுக்களே
உங்கள் அத்திவாரங்கள் எங்கே...?
நீதி உணர்த்திய
தமிழீழ நீதிமன்றமே....-நீ
தப்பிழைத்ததாய் அறிந்ததில்லையே....

செந்தமிழில் பளிச்சிட்ட

பதாகைகளே......
சிங்கள மொழியில் மாறியதன்
காரணம் தான் என்ன...?
எம் தேச அரசமரமே
உன்னடியில் முளைத்திருக்கும்
சிலைதான் ஏனோ
நீயாவது சரிந்து
வீழ்ந்திடமாட்டாயோ...?

தேசத்து வாழ்வுக்காய்
தேகத்தைக் கொடுத்த
உத்தமர் ஆலயங்களே
இறப்பின் பின்னும்
நின்மதியில்லைநம் தேசத்தில்

வெறும் கற்கள்
உம்மை என்னையா செய்தன..?
மீண்டும் முளைத்துவிடும்
என்ற அச்சம் தானோ
சூழவிருந்த சுவர்கள்
துப்பாக்கி தூக்கி
சுடும் என்ற பிரமையா?

ஓடோடிவரம் வேண்டிய
தேவாலயமே,கோவில்களே
எம் மண்ணைக் காத்திடு என்று
கெஞ்சிக் கேட்டோமே
ஏன் கடவுளே தரமறுத்தீர்

ஆண்டவரே...
அலரி மாளிகையில்
அவலக்குரல் இனியும் கேட்கதோ..?
கும்பிட்ட தெய்வங்களே-நீங்கள்
மனிதர்களாக மாறிவிட்டீர்களா?
சத்தியமாய் கேட்கிறேன்
கோபம் ஒன்றும்
என்மீது வேண்டாம்
குமுறி வெடிக்கும்
உள்ளத்துத் துடிப்பால் பேசுகிறேன்

ஆயிரமாயிரம் உயிர்களை
துடிக்க துடிக்க
பிழிந்து குடித்தவர்
எப்படி இறைவா அவர்க்கு
இப்படி வாழ்க்கை
நீதி தவறி நடந்தவர்

கொடுமைகள் இழைத்தவர்
நிலைப்பது என்பதில்லை-இது
உலக நியதியே
இவர்க்கு மட்டும்
சுவர்க்கமா...?

ஆண்டவரே
நெருப் பெரித்தவர்க்கு
கொடுத்துவிட்டாய் தண்டனை
தீயெடுத்துக் கொடுத்தவர்கு
எப்போது சாவு
மனித உரிமை மீறல்களாம்
உலகம் முழுதும் வெளிச்சம்
விசாரணையாம்...!
எதுவும் நடந்ததாய் தெரியவில்லை
செத்துக் கிடக்கிறது நீதி

ஆதாரம் ஏராளம்-ஆனால்
அணு கூட அசைவதாயில்லை
பொய்யும் புரட்டும்
சுத்து மாத்துக்கும்தானா
மவுசு இவ்வுலகில்


மீண்டும் மீண்டும்
நரக வேதனையா தமிழர்க்கு
நரகத்திற்கு சென்றால்
தமிழர்க்கு அது பெரிதாய் தோற்றிடாது
என்று நான் எண்ணுகின்றேன்

தமிழர் மனங்களில் கொதிக்கும்
எரிமலை குழம்பு
ஓர் நாள் வெடிக்கத்தான் செய்யும்
பற்றியெரியும் நெருப்பு
விடுதலைத்தீயாய் பற்றும்
ஓர் நாள்......
வரண்டு போன என் மண்ணே
சிரிப்பாய் ஓர் நாள்..


செம்பகம்

3.3.10

ஓய்வறையோ ..அல்ல கழிப்பறையோ













நாட்டை விட்டு

கடந்து வந்தேன்
இறங்கி வைத்த
முதல் அடி
விமான நிலையம்
காண்பவர் எல்லாம்
வேற்று மொழியுடையோர்

எங்கு போய்
ஏது செய்வது
எதுவும் அறியேன்
கூட வந்தவர் பின்னே
ஓடோடி நடந்தேன்
இடை நடுவில்
திக்குத் திக்காய்
பிரிந்தார்கள் அவர்கள்

அருகில் வந்தவரிடம்
லைக்கேஜ் எடுக்குமிடம்
சைகையால் கேட்டேன்
எதிர்த்திசை நோக்கி
எளிதாய்க் காட்டினார்
கடவுள் புண்ணியமென
கட கடவென நடந்தேன்
அட பாவி...............
அவருக்கு விளங்கியது ஏதோ-அது
களிப்பறைக் கூடம்

பின்னால் வந்த கிழவனிடம்
வழியைக் கேட்டேன் -அவர்
சிரித்து விட்டு போனார்
என்னையா கொடுமை
யாரிடம் போய்
எப்படிக் கேட்க..?

நம்ம நாட்டில
இங்கிலீசு கதைச்சால்
இழிச்சிட்டு போவாங்க -எனக்கு
ஆங்கிலீசும் கம்மி...
மாறி மாறி அலைந்து
மண்டை வெடிச்சு
வெளிநாடோ........-அது
ஒரு நாளோடே
வெறுத்துப் போயிற்று

தேடி தேடி
றோட்டுக்கு வந்தேன்
கார் சாரதியிட்ட
முகவரியைக் கொடுத்தேன்
தன் மொழியில பேசினான்
என்ன விளங்கும் எனக்கு
அரை குறையாய்
விளங்க வைச்சு
ஏறி விட்டேன் வாகனத்தில


நெடு நேரமாய் நகருது
எங்க போகுதோ
நின்ற பின் தான் தெரியும்
ஓய்வறையோ ...........அல்ல
கழிப்பறையோ என்று !!!!!!!!


செம்பகம்
















 

26.2.10

நண்பனே நினைவிருக்கிறதா....




















நீயும் நானும்

அருவரியில் அறிமுகமானோம்
படித்தது ஒரே பள்ளி
படிப்பில் மட்டும் போட்டி
குறும்பு வித்தைகளால்
குறையாமல்வேண்டும் தண்டனைகள்
நினைவிருக்கா நண்பனே..?

கணித வாத்தியாரிடம்
காதில் வேண்டும் முறுக்கு
அடிக்க முயன்றால்
அசத்தும் அசல் சிரிப்பு
பக்கத்து வகுப்பு
பரமேசின் சைற்றடிப்பு
வருகிறதா நினைவில்..?

வடிவேல் வாத்தியார்
வாற்கட்டை ஒழித்து
வசமாய் மாட்டியது
மணியக்கா வீட்டு
மாங்காய்க்குகல்லெறிந்து
மண்டை மண்டையாய்
வேண்டியது.........
பள்ளி முன்றலில்
அடிக்கடி இருக்கும்
முட்டுக்கால்.........

தோழா எங்கள்
பள்ளி வாழ்வில்
எத்தனை சந்தோசிப்பு
ஞாபகம் இருக்கிறதா...?
என்னைப்புரிந்திருப்பாய்

இணை பிரியா
நண்பர்கள் அன்று
வெளிநாடு என்று
வெளியேறினாய்
பிரிவிற்காய் துடித்தாய்
வழியனுப்பும் போதும்
விழிகசியச் சென்றாய்

இன்று ..........
நீயாரோ நான்யாரோ
தொலைபேசி எடுத்தாலும்
தொடர்புகொள்ள மறுக்கிறாயே
ஏனோ புரியவில்லை...?


செம்பகம்

24.2.10

மீண்டும் மீண்டும் சோதனையா....?


















சொந்த நிலத்தின் சுகமிழந்து
சொந்தங்கள் பலவிழந்து
அகதிகள் பட்டியலோடு
ஆற்றமுடியா வலி சுமந்து
ஏக்கத்தோடு இருக்கும் உறவுகளே!
எங்கள் ஏக்கமூச்சு
எவருக்குத்தான் புரியும்

மூட்டை தூக்கி
மூன்று காசு உழைத்து
மண் உழுது
மாடாய் தேய்ந்து
உரமேறிய தேட்டங்கள்
அரங்கேறிய யுத்தத்தால்
நிலையற்றுப்போனது எம் வாழ்க்கைப்பயணம்

ஊர் விட்டு ஊர்மாறி
உயிரை மட்டும் காவி
ஆறி அமரமுன்னே
அடுத்தடுத்த பெயர்வுகள்......
ஓடினோம்..... ஓடினோம்...

அடுகடுக்காய் கூவிவரும்
அரக்கர் கணைகள்
பல்லாயிரம் உறவுகளை
பலியெடுத்தது
அவலக்குரலே கேட்காத
அதிகாலைக்காய் காத்திருந்தோம்

எங்கு பார்த்தாலும்
உடல்கள்
எதை எடுத்தாலும்
தசைச் சிதைவுகள்
எங்கு நகர்ந்தாலும்
குருதி வெள்ளம்
இறந்தவர் உடல்களை
தொட்டழ நேரமின்றி
பதுங்கு குழிகழுள்ளே
புதைத்துச்சென்றோம்

மொத்தமாய்ச் சொன்னால்
மரணத்தையே தின்று
மரணத்துள்ளே வாழ்ந்தோம்


இப்படியே ......
விலைகள் கொடுத்தோம்
விடுதலை கிடைக்குமென்றே

இன்றும் ........
முட்கம்பி வேலியுள்
முடக்கப்பட்ட கைதிகளாய்
கூடாரமே இருப்பிடமாய்
வரண்டு கிடக்கிறது - இந்த
மனித வாழ்க்கை

நீண்ட வரிசைக்குள்ளே
நீருணவுக்கு மட்டுமின்றி
கழிவுக்கூடத்துக்கும் காத்திருப்பு
இப்படியே
இராணுவ முற்றுகையுள் நகர்கிறது
எங்கள் நரக வாழ்க்கை

திரும்பிப் பார்க்கும் உலகே
தீர்வுகள் எமக்கில்லையா? - உனது
மனித உரிமைகள் எங்கே?
மூடிய விழிகளை திறந்திடாயோ?....

செம்பகம்

23.2.10

பெற்றவளுக்கு.......

















நான்கு பக்க சுவருக்குள்
நலிவுற்றுக்கிடக்கிறேன்
திக்கெல்லாம் எனக்கு
இருளாகித்தெரிகிறது
விதி செய்த சதியா - அல்ல
தமிழ் மகன் என்ற தவறா

பத்துமாதம் கருவறையுள்
பக்குவமாய் சுமந்தாய்
இத்தரையில் பிரசவித்தாய்
சித்திரவதைக்காகவா......?

ஏது பிழை செய்தேன்
இது வரைக்கும் நானறியேன்
சந்தேகமென்று சொல்லி
சாட்டையடி அடிக்கிறார்கள்
உதைக்கிறார்கள்....
மிதிக்கிறார்கள்....
நகத்தைக் கூட
சும்மா விடவில்லை
ஏதேதோ எல்லாம்
என்னைச்சுற்றி நடக்கிறது

கூட இருந்தவர் பலரை
கூட்டிச்சென்றனர் உடையின்றி - அவர்
கெதி என்னென்னவோ

நான்.....இதுவரைக்கும்
துப்பாக்கி தூக்கி
விசைவில் அழுத்தியதில்லை
நீ அறிவாய்

வன்னி மண்ணில் வாழ்ந்து
தமிழை யாசித்தவன் - அங்கு
நித்தமும் நடந்த
யுத்தத்தை கண்டவன்
கொத்துக்கொத்தாய் தமிழரை
கொன்ற விதம் பார்த்தவன்

சிங்கள இராணுவத்தை-முன்பு
சத்தியமாய் கண்டதில்லை
இன்று தான் காண்கின்றேன்
பிணம் கூடத்தின்பார்கள்
குருதியைக்குடிப்பார்கள்
மனிதர் என்ற சொல்லிற்கே
அர்த்தமற்ற மிருகங்கள்

அம்மா
ஆயுதம் தூக்கி அடியென்று
ஆழ்மனசு சொல்கிறது
வன்முறையால் வன்முறையை
அடக்குவது உண்மையம்மா
சந்திரன் உடைந்தால்
நிலவில்லை
சிறைகுள்ளே என்
சுவாசம் அடங்கிப்போனலும்
மறு பிறவியில் உன் மகனாய்
பெற்று விடு அம்மா.


செம்பகம்

எதற்கான போர்ப்பு














தமிழர் உயிர்களின்

அழிப்பிற்கானதா........?

அடைத்து வைத்து தமிழரை
அட்டகாசம் செய்வதற்கானதா....?
அப்பாவி மக்களின்
அழுகைக்கானதா.......

தாகந்தீர்க்க தண்ணீரின்றி
தவிக்க வைக்கும்
கொடுமைக்கானதா.....?

நோயாலே நித்தமும் தமிழர்
வாடுவதற்கானதா.......?

பெற்றோரை இழந்த
உற்றோரைப்பிரிந்த
அனாதைகளாய் அலையவைத்த
அக்கிரமத்திற்கானதா.........?

கொதிக்கிறது இரத்தம்!!!!!!
படுகொலையின் நாயகனுக்கு
பொன்னாடைப் போர்ப்பா?
காரணம் தான் புரியவில்லை


செம்பகம்

நீயில்லை அருகில்.......




















அன்பிற்காய் ஏங்குகின்றேன்

அரவணத்திட ..........
நீயில்லை அருகில்

பட்ட காயங்களின்
வேதனையால் தவிக்கிறேன்
தடவிவிட ..........
நீயில்லை அருகில்

தூக்கத்தைத் தொலைத்த
இரவுகளில் விழித்திருக்கின்றேன்
ஏனென்று கேட்க......................
நீயில்லை அருகில்

மனசின் வலிகளை
கொட்டிட என்ணுகிறேன்.......
நீயில்லை அருகில்

சந்தோசத்தைச் சொல்ல
சந்தோசிக்க விரும்புகிறேன்........
நீயில்லை அருகில்

கன்னத்தில் வழியும்
கண்ணீர் கோடுகளே-இப்போ
எனக்குச் சொந்தம்
யாருக்குமே தெரியாமல்
துடைத்துக்கொள்கிறேன் -என்
மௌன அழுகை-உன்
இதயத்தை பிழியும்..........
நான் அறிவேன்

இப்படியே ...........
வலிகளையே வாழ்வாக்கி
வாழ்கிறது இந்த ஜீவிதம்
அன்னையே உன்
அருகிருக்க துடிக்கிறேன்
முடியவில்லையே..........


செம்பகம்

21.2.10

துடிப்பு




















எதையோ நினைத்தபடி
கால்கள் நடந்தன
மெல்லிய தென்றல்
மெதுவாய்த் தழுவி
மௌனமாய் சென்றது
மனசுக்குள் ஓர் விறுவிறுப்பு
எதை பார்த்தாலும்
சோபையிழந்த துடிப்பு

அடி வைக்கும் இடமெல்லாம்
பள்ளமும் திட்டியுமாய்.....
முன்பேதும் அறியாத
முகங்களும்.......
எப்போதும் ஒலிக்காத
மொழிகளும்........
புதிதாய் நிறுவப்பட்ட
கட்டடங்களும்.......
எல்லாமே புதிதான
தோற்றத்தில்.......

உதிக்கின்ற சூரியனின்
உதயத்தில் மகிழ்வில்லை
வீசுகின்ற காற்றில்
வாசம் தெரியவில்லை
பச்சை மரங்கள்
பசுமை இழந்ததாய்......
பட்ட மரங்கள்-அதன்
கதை சொல்வதாய்.....

கரைமோதும் அலையில்
நிறைவேதும் இல்லாததாய்....
விரிகின்ற மலர்கள்
வடிவு இழந்ததாய்......
வாழ்கின்ற விலங்கினம்
வலி சுமந்ததாய்......
பறந்து செல்லும்
பறவைக்கூட்டம்
எதையோ தொலைத்ததாய்.....

கண்கள் கண்டதெல்லாம்
கதையாகிப் போனது

அப்போது.........
புரிந்தது மனசு -அங்கு
விஞ்சியிருக்கும் மனிதர்கள் -இனி
சிரிக்கவே மாட்டார்களா....?
ஏக்கத்தோடு நகர்ந்தது கால்கள்



செம்பகம்

3.2.10

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.


( தீவிரமாக யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

( ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்)

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!

அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?யோசிக்கனும்....!!

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.

கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான் உலகம்

T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.

உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சாஉனக்கு சங்கு.

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?

இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?